"குட்டி மெரீனா"வாக மாறிய கோவில் தெப்பக்குளம் - குவியும் மக்கள்..!
“ஸ்மார்ட் சிட்டி” திட்டம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நீர் நிரம்பி ரம்மியமாய் காட்சியளிக்கும் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தை உள்ளூர்வாசிகள் வியப்புடன் கண்டுகளித்து வருகின்றனர்.
மதுரை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம். மழைநீரும் வைகை ஆற்று நீரும் வந்து சேர எப்போதும் நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளித்து வந்தது இந்தக் குளம். மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் படகுப் போக்குவரத்தும் விடப்பட்டதால் உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று தெப்பக்குளத்தின் ரம்மியமான அழகை கண்டு ரசித்தனர்.
நாளடைவில் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் வருவது நின்றதால், குளம் வறண்டுபோகத் தொடங்கியது. இதனால் கடந்த பல ஆண்டுகளாக அங்கு படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் மூலம் வைகை ஆற்றில் இருந்து சுரங்கப் பாதைகள் வழியே குளத்துக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை கைகொடுத்ததால் வைகை ஆற்று நீர் குளத்தில் நிரம்பி தெப்பக்குளமே ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. அதன் அழகைக் காண நாள்தோறும் உள்ளூர் வாசிகள் வந்து செல்கின்றனர்.
கொரேனாவால் வாழ்வாதாரத்தை இழந்துதவித்த சிறு, குறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் தெப்பக்குளத்தைச் சுற்றிலும் கடைகள் அமைத்து உற்சாகமாக வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
குளத்தில் தண்ணீர் நிரந்தரமாக தேங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து, படகுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என மதுரை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Comments